search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாஸ்திரா பல்கலைக்கழகம்"

    சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SastraUniversity
    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திருமலை சமுத்திரத்தில் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம், அரசு நிலம் 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

    அதாவது திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்ட அரசு நிலத்தில் 28 கட்டிடங்கள் கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் சாஸ்திரா ஆக்கிரமிப்பு வழக்கு ஐகோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 3-ந் தேதிக்குள் அங்குள்ள கட்டிடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக சிறைத்துறை நிர்வாகம் அந்த இடத்தில் வேலி அமைத்து 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், மாணவிகள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த நிலத்தை எங்களுக்கே அளிக்க வேண்டும். அதற்கான அரசு நிர்ணயித்த தொகையை செலுத்த தயாராக உள்ளோம். திறந்தவெளி சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் அரசிடம் அணுகி பரிகாரம் தேடி கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு அளித்த காலக்கெடுவுக்குள் (அக்டோபர் 3-ந் தேதி) கட்டிடங்களை காலி செய்ய தஞ்சாவூர் தாசில்தார் சாஸ்திரா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    இதையடுத்து நோட்டீசு பெற்றுக்கொண்ட பல்கலைக் கழக நிர்வாகத்தினர், அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் விடுதிகளில் 2500 மாணவிகள் தங்கி படித்துள்ளனர். இதனால் தற்போது இடத்தை காலி செய்ய இயலவில்லை என்ற காரணத்தை தெரிவித்தனர். மேலும் மற்ற கட்டிடங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் திறந்தவெளி சிறையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு அந்த இடத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த் துறை மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்தனர்.

    இதனால் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SastraUniversity
    அரசு நிலத்தில் இருந்து சாஸ்திரா பல்கலைக்கழகம் வெளியேற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #MKStalin #SastraUniversity
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “தஞ்சாவூரில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 58.17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் அக்டோபர் 3-ந்தேதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும்” என்று தஞ்சாவூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியும், இன்றுவரை நில ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளவும், ஆக்கிரமித்துக் கட்டியுள்ள 28 கட்டிடங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்கும் சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கும், இந்த சட்டமீறல் அநியாயத்திற்குத் துணைபோகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    30 வருடங்களுக்கும் மேலாக, அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி, உயர்நீதி மன்றத்தின் மூன்றாவது நீதிபதி அளித்த தீர்ப்பையும் மதிக்காமல், பல்வேறு நிலைகளில் முறையீடுகளை செய்தும் “அரசு நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பேராசை அராஜக மனப்பான்மையுடன்” ஒரு பல்கலைக்கழகம் நடந்து கொள்வதும், அதற்கு அ.தி.மு.க. அரசில் உள்ள முதல்-அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் துணை போவதும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையே செயலிழக்கச் செய்து, எள்ளி நகையாடுவது போல் அமைந்திருக்கிறது.

    முதல்-அமைச்சரும், தலைமைச் செயலாளரும் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குத் துணை போயிருக்கிறார்கள். வருவாய்த் துறை அமைச்சரோ சைக்கிள் பேரணி விடுவதிலும் வாய்நீளம் காட்டுவதிலும் காலத்தைப் போக்கினாரே தவிர, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு முக்கிய வழக்கில், தெரிந்தே வேண்டுமென்றே வழக்கறிஞரை ஆஜராக வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.



    அ.தி.மு.க. அரசின் அத்தனை சதிகளையும் முறியடித்து அம்பலப்படுத்திடும் வகையில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே தீர்ப்பளித்து விட்டார்கள்.

    அதன்பிறகு வேறு வழியின்றி ஒரு “எவிக்சன் நோட்டீஸ்” சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டாலும், அக்டோபர் 3-ந்தேதிக்குள் இடத்தைக் காலி செய்து அரசு வசம் ஒப்படைக்கும் எந்த முன்னேற்பாடுகளிலும் சாஸ்திரா பல்கலைக்கழகமும் ஈடுபடவில்லை; அ.தி.மு.க. அரசும் அதுபற்றிக் கண்டு கொள்ளாமல் கண்களைப் பொத்திக்கொண்டு இருக்கிறது.

    ஆக்கிரமித்த அரசு நிலத்தை காலி செய்யாமல் கவர்னர் மாளிகைக்கு சாஸ்திரா பல்கலைக் கழகத் துணைவேந்தர் போய் வந்திருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக பா.ஜ.க.வினரும், சங் பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்துக் கொண்டிருப்பதாக “சமூக வலைதளங்களில்” வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

    அக்டோபர் 3-ந்தேதிக்குள் ஆக்கிரமித்த நிலங்கள் மற்றும் அங்கு கட்டியுள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தஞ்சாவூர் தாசில்தாரின் நோட்டீஸ் என்ன ஆகப்போகிறது என்ற கேள்வி பெரிதாக எழத் துவங்கியுள்ளது.

    சாலையோரங்களில் குடியிருக்கும் ஏழைகளை காலி பண்ணவும், சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு விவசாயிகளின் சொந்த நிலங்களைப் பறிக்கவும் காவல்துறையை ஏவிவிட்ட அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றமே இறுதித் தீர்ப்பை அளித்து விட்ட பிறகும், சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை, நிலங்களை பறிமுதல் செய்ய காவல்துறை மூலம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் செயலற்று இருப்பது ஏன்?

    சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடுப்பது யார்? தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் துவக்கத்திலிருந்தே சாஸ்திரா பல்கலைக்கழக விவகாரத்தில் மற்ற ஆக்கிரமிப்பாளர்களி டம் காட்டும் அதிகாரத்தை, சாஸ்திரா பல்கலைக் கழகத்திடம் காட்ட மறுப்பது ஏன்? அதுவும் 58 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு நிலத்தை மீட்க அவர் சட்டப்படி அக்கறை காட்டாதது ஏன்? என்ற கேள்விகள் எல்லாம் அடுக்கடுக்காக எழுகின்றன.

    ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் நிலத்தை உடனடியாகக் கைப்பற்றி, திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தலைமைச் செயலாளரோ, அ.தி.மு.க. அரசோ உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பின் படி, அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், எந்த திக்கிலிருந்து வரும் எவ்வித திரைமறைவு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டப்படி தீர்ப்பினை நிறைவேற்றி, அரசு நிலத்தையும் பொதுநலனையும் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #SastraUniversity

    தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 58 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐக்கோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. #TNGovernment #highCourt
    தஞ்சாவூர்:

    எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் சிறைச்சாலைகளில் அதிக நெருக்கடி இருப்பதை தவிர்ப்பதற்காக 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை திருமலைச முத்திரம் என்ற இடத்தில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.

    சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கையகப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பி அங்கு கல்லூரி இயங்கி வருகிறது.

    தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் துணையுடன் நிலத்தை வளைத்து போட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் சமூக ஆர்வலர்கள் பலர் , ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு தரப்பில் நடவடிக்கை இல்லாமல் இந்த விவகாரம் கிடப்பிலேயே இருந்து வந்தது.

    இதற்கிடையே இந்த விவகாரம் யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அரசு அதிகாரிகளின் துணையுடன் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதை உடனடியாக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, ஐகோர்ட்டில் சாஸ்த்ரா சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலத்துக்கான தொகையை அரசுக்கு வழங்கத் தயார் என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. தீர்ப்பில் நீதிபதி நூட்டி ராமமோகனராவ், தமிழக அரசு, இந்த நிலத்தின் சந்தை மதிப்பு 10 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு, நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திடம் ஓப்படைக்கலாம். என்று உத்தரவிட்டார்.

    ஆனால் நீதிபதி சுப்பிரமணியம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்துக்கு பணம் பெற்று விட்டு ஆக்கிரமித்தவரிடமே ஒப்படைப்பது என்பது, தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட 58.17 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இரு மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், இந்த வழக்கை 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வந்தார். இந்நிலையில், ஐகோர்ட்டு கிளையில் வைத்து, நீதிபதி கார்த்திகேயன் நேற்று பிறப்பித்த உத்தரவில், நீதிபதி சுப்பிரமணியத்தின் தீர்ப்பை உறுதி செய்தார். அதாவது, தஞ்சை சாஸ்த்ரா சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58.17 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு உடனடியாக கையகப்படுத்தி மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தற்போது ஆக்கிரமிப்பு நில பிரச்சினை குறித்த தீர்ப்பால் சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #TNGovernment #highCourt
    22 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தை சாஸ்திரா பல்கலைக்கழகத்திடம் இருந்து அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #SastraUniversity
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூரில் அமையவிருக்கும் திறந்தவெளி சிறைச்சாலையைத் தடுக்கும்விதமாக, அதற்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டு, அதிலிருந்து வெளியேற மாட்டோம் என்று ஏறக்குறைய 22 வருடங்களுக்கும் மேலாகப் பிடிவாதம் காட்டி வரும் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் சமூக விரோதப் போக்கு, ஒரு கல்வி நிலையத்திற்கு உகந்த அணுகுமுறையாக இல்லை.

    திட்டத்திற்கான வரைவு அனுமதி இல்லாமல் கட்டிய கல்வி நிலையங்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டிய கல்வி நிலையங்கள் புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் ஆக்கிரமிப்பை மட்டும், சந்தேகப்படும்படியான காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, தலைமைச் செயலாளர் மட்டத்தில் இந்த நிலத்திற்கு மாற்று நிலத்தை பெற்றுக் கொண்டு, எப்படியாவது சாஸ்திரா பல்கலைக் கழகத்திற்கு உதவிட, இப்போதும் முயற்சிப்பது ஏன் என்றும் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.


    அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு எப்படி அங்கீகாரம் அளித்தது? இப்போது அந்தப் பல்கலைக்கழகம் கொடுக்கும் மாற்று நிலங்களை ஏற்றுக்கொண்டு, ஆக்கிரமித்த நிலங்களை விட்டுவிடுங்கள் என்று நில நிர்வாகத்துறைக்கு தலைமைச் செயலாளரே அழுத்தம் கொடுப்பதாக வெளிவந்த செய்திகளின் பின்னணி என்ன?

    ஆகவே, சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை உடனடியாகக் கைப்பற்றி, தஞ்சாவூரில் சிறைச்சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் திறந்தவெளி சிறைச்சாலை விரைவில் அமைவதற்கு, அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆக்கிரமித்த நிலங்களை திருப்பிக் கொடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் அதிமுக அரசு உடன்படாமல், அரசுக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகளை கண்காணித்து, அவர்கள் எவ்வளவு உயர்நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #SastraUniversity #MKStalin
    ×